தொடர்ந்து மூன்றாவது நாளாக அரசு ஊழியர் சங்கத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மூன்றாவது நாளாக நேற்று முன்தினம் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டம் திருவண்ணாமலை அண்ணா சிலை அருகில் ஆரம்பித்து பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக புறப்பட்டு தாலுகா அலுவலகம் அருகில் பெரியார் சிலை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
அரசு ஊழியர்கள் வலியுறுத்திய கோரிக்கைகளாவது “புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். சத்துணவு மற்றும் அங்கன்வாடி, கிராம உதவியாளர், எம்.ஆர்.பி செவிலியர்கள், உட்புற நூலகர்கள் உள்ளிட்டோருக்கு காலமுறை அரசு ஊதியம் வழங்கப்பட வேண்டும். அரசுத் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை விரைவில் நிரப்பப்பட வேண்டும்” என பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கோஷங்கள் எழுப்பியுள்ளனர். பின்னர் சாலை மறியலில் ஈடுபட்ட 177 அரசு ஊழியர்களை காவல்துறையினர் கைது செய்து திருவண்ணாமலையில் உள்ள தனியார் மண்டபத்தில் அடைத்துள்ளனர். அதில் 123 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.