தமிழகத்தில் பள்ளிக்கு வரும் மாணவர்கள் அனைவரும் கட்டாயம் பெற்றோரின் அனுமதி கடிதம் பெற்று வர வேண்டும் என பள்ளிக்கல்வி துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இதற்கு மத்தியில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நெருங்கிக் கொண்டிருப்பதால், மாணவர்களின் பெற்றோர்களிடம் பள்ளிகள் திறப்பது பற்றி கருத்து கேட்கப்பட்டது. அதற்கு 90% பெற்றோர்கள் சம்மதம் தெரிவித்த நிலையில் ஜனவரி 19ஆம் தேதி 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது.
தற்போது அரசு பள்ளிகளில் 92 சதவீத மாணவர்கள் வருகை புரிந்துள்ளதால் வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன.இவர்களுக்கு ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை தவிர பிற நாட்களில் வாரத்தில் ஆறு நாட்களுக்கு என பள்ளிகள் செயல்படும் என்று அறிவித்துள்ளது. இந்நிலையில் 9 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி 8-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
அதன்படி மாணவர்கள் கட்டாயம் பெற்றோரின் அனுமதி கடிதம் பெற்று பள்ளிக்கு வர வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் கொரோனா பரவலை தடுக்கும் வழி முறைகள் உடன் பள்ளிகள் செயல்பட வேண்டும் என அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுறுத்தியுள்ளது.