தமிழகத்தில் வரும் சட்டமன்ற தேர்தலில் ரஜினிகாந்த் யாருக்கும் ஆதரவு அளிக்க மாட்டார் என்று ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி சுதாகர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைத் தண்டனையை அனுபவித்துக் கொண்டிருந்த சசிகலா கடந்த ஜனவரி 26-ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
அவரின் வருகை அரசியலில் ஏதாவது மாற்றத்தை ஏற்படுத்துமா என்று அனைவரும் குழப்பத்தில் உள்ளனர். இதனைத் தொடர்ந்து கட்சி தொடங்கப் போவதாக அறிவித்திருந்த ரஜினி தனது உடல் நலக்குறைவு காரணமாக கட்சி தொடங்க போவதில்லை என்று அறிவித்தார். அந்த அறிவிப்பு அவரது ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. மேலும் அவரின் ஆதரவு எப்போதும் மக்களுக்கு இருக்கும் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் தமிழகத்தில் நடக்கவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் ரஜினிகாந்த் யாருக்கும் ஆதரவு அளிக்க மாட்டார். ரஜினி 100% இந்த சட்டமன்ற தேர்தலில் வரமாட்டார். லதா ரஜினி கட்சி தொடங்கப் போவதாக வெளியாகும் தகவல்கள் உண்மையில்லை என்று ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி சுதாகர் தெரிவித்துள்ளார். ஆனால் ரஜினி எந்த ஒரு கருத்தும் தெரிவிக்கவில்லை. அவர் ஆதரவு அளிப்பாரா மாட்டாரா என்பது ரஜினி அறிவித்த பிறகுதான் தெரியவரும்.