சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் கட்டுப்பாடுகளுடன் தை அமாவாசையையொட்டி திறக்கப்பட உள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இந்நிலையில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலுக்கு ஒவ்வொரு மாதமும் அமாவாசை, பவுர்ணமி மற்றும் பிரதோஷம் போன்ற தினங்களில் மட்டுமே பக்தர்கள் சுவாமியை தரிசிக்க அனுமதிக்கப்படுகிறார்கள். இதனையடுத்து வருகிற 11-ஆம் தேதி தை அமாவாசை நாளாக இருப்பதால் கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடக்க உள்ளது.
மேலும் வருகிற 9-ஆம் தேதி முதல் 12ம் தேதி வரை கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் அனுமதிக்கப்படுவார்கள் என்று கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி நாடுகளிலிருந்து வரும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்திராயிருப்பு வழியாக உள்ள தாணிப்பாறை மலை பாதை மற்றும் மதுரை மாவட்டம் பேரையூர் வாழைத்தோப்பு மலைப்பாதை போன்ற மார்கத்தில் கோவிலுக்கு சென்று வர அனுமதிக்கப்படுவர். மேலும் வனத்துறையினர், தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல் துறையினர் பக்தர்களின் பாதுகாப்பிற்காக நீரோடை பகுதிகளில் பணியில் ஈடுபடுத்தப்பட இருக்கின்றனர்.