அர்ஜுனா மூர்த்தி கட்சி தொடங்கினால் ரஜினி மக்கள் மன்றத்திற்கும் அவருக்கும் தொடர்பு இல்லை என ரஜினி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இதற்கு மத்தியில் சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைத் தண்டனை அனுபவித்து கொண்டிருந்த சசிகலா கடந்த ஜனவரி 27-ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டார். அவரின் வருகை அரசியல் ஏதாவது மாற்றத்தை ஏற்படுத்துமா என அனைவரும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து நடிகர் ரஜினி புது கட்சி தொடங்கப் போவதாக கடந்த நவம்பர் மாதம் அறிவித்தார். ஆனால் அவரின் உடல்நிலை சற்று மோசமானதால் தன் கட்சி தொடங்கப் போவது இல்லை என்று அதிர்ச்சி அறிவிப்பை ரசிகர்களுக்கு வெளியிட்டார். அதனால் ரசிகர்கள் அனைவரும் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
இந்நிலையில் அர்ஜுனா மூர்த்தி கட்சி தொடங்கினால், ரஜினி மக்கள் மன்றத்திற்கும் அவருக்கும் தொடர்பு இல்லை என்று ரஜினி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கட்சி தொடங்கினால் ரஜினி ரசிகர்கள் அவருக்கு ஆதரவு தெரிவிப்பார்கள். ஆதரவு பெருகும் பட்சத்தில் தன்னுடைய கட்சியை அப்படியே பாஜகவுடன் இணைத்து விடலாம் என்று கணக்குப் போட்ட அர்ஜுனா மூர்த்திக்கு இது பெரிய சறுக்கலாக அமைந்துள்ளது.