சென்னை துறைமுகத்தில் பணியாட்கள் தேர்வு செய்யப் படுவதாக பொதுமக்களிடம் மோசடி கும்பல் ஏமாற்றி வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
தமிழகத்தில் பெரும்பாலான இளைஞர்கள் படித்து முடித்துவிட்டு வேலையில்லாமல் திண்டாடிக் கொண்டிருகின்றனர். அவ்வாறு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு தேடி தரும் வகையில் சில விளம்பரங்கள் வெளியிடப்படுகின்றன. அதில் உண்மை தகவல்களும் உண்டு பொய்யான தகவல்களும் உண்டு. அதை நம்பி சிலர் பணத்தை பறிகொடுத்து ஏமாறுகிறார்கள். அதன்படி சென்னையில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. சென்னை துறைமுகத்தில் பணியாளர்கள் தேர்வு செய்யப் படுவதாக கூறி பொதுமக்களிடம் பணம் பெற்று சிலர் மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.
இதனையடுத்து இதுபோன்ற அறிவிப்புகளை நம்பி மக்கள் யாரும் ஏமாற வேண்டாம் என துறைமுக நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. அதன் உண்மையான விவரங்கள் www.chennaiport.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படும். மோசடி நபர்கள் குறித்த தகவல்கள் இருந்தால் 044-25367754, 25392259 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பொதுமக்கள் புகார் அளிக்கலாம் என கூறியுள்ளது.