சபாநாயகர் தனபால் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தை எடுக்க வலியுறுத்த மாட்டோம் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் சபாநாயகர் தனபால் தலைமையில் தொடங்கியது. அப்போது மறைந்த எம்எல்ஏக்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இன்றைய அவை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் சட்டப்பேரவை சனி, ஞாயிறு விடுமுறை நாட்களுக்குப் பின் மீண்டும் ஜூலை 1ஆம் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திமுக தலைவர் ஸ்டாலின், “சபாநாயகர் தனபால் மீது கொடுத்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை எடுக்க வலியுறுத்த மாட்டோம். அன்றைய சூழலில் தீர்மானம் கொண்டுவர வலியுறுத்தினோம். தற்போது அதை வலியுறுத்தப்போவதில்லை என்று தெரிவித்தார். மேலும் அவர் பேசுகையில், குடிநீர் பிரச்னைக்கு திமுக ஆட்சியில் வழங்கிய முக்கியத்துவம் போன்று அதிமுக ஆட்சியில் முக்கியத்துவம் கொடுக்காததால் தான் இன்று தமிழகத்தில் இத்தகைய தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.