இறந்து கிடந்த பெண் யானைக்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்ட பின் அது புதைக்கப்பட்டது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர் வனப் சரகத்திற்கு உட்பட்ட புதுபீர் கடவு வனப்பகுதியில் வனத்துறை ஊழியர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது போளி பள்ளம் என்ற இடத்தில் ஒரு யானை இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து வனத்துறை உயர் அதிகாரிகளுக்கு உடனடியாக தகவல் தெரிவித்து விட்டனர். இதனைத்தொடர்ந்து பவானிசாகர் வனச்சரக அதிகாரி சரவணன், வனத்துறை கால்நடை மருத்துவர் அசோகன் போன்றோர் சத்தியமங்கலம் புலிகள் காப்பக கள இயக்குனர் நிரஞ்சன், மாவட்ட வன அலுவலர் அருணா ஆகியோரின் உத்தரவின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
அதன்பின்னர் அந்த யானைக்கு உடல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட பிறகு டாக்டர் அசோகன் கூறும் போது, அப்பகுதியில் இறந்து கிடந்த யானைக்கு 40 வயது இருக்கும் என்று கூறியுள்ளார். இந்த யானையின் உடல் கூறுகள் கோவைக்கு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது என்றும், இதன் முடிவுகள் வந்த பின்னர் தான் யானை ஏன் இறந்தது என்ற விவரம் குறித்து தெரியவரும் என கூறியுள்ளார். அதன் பிறகு அதே இடத்தில் குழி தோண்டி அந்த யானையை புதைத்துவிட்டனர்.