குடும்ப தகராறில் 10 பிள்ளைகளை பெற்ற மாமியாரை மருமகன் கத்தியால் குத்தி கொலை செய்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பகுதியில் வசிப்பவர் பொன்னம்மாள் (70). இவருக்கு 10 பிள்ளைகள் உள்ளனர். இதில் தன்னுடைய ஏழாவது மகள் ராமலட்சுமியை முருகன் என்பவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளார். இந்நிலையில் முருகன் அடிக்கடி குடித்துவிட்டு தன்னுடைய தன்னுடைய மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளார். இதனால் மகளின் பாதுகாப்பிற்காக ராமலட்சுமியின் வீட்டில் பொன்னம்மாள் தங்கி வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று வழக்கம்போல முருகன் குடித்து விட்டு தகராறு செய்துள்ளார். அப்போது பொன்னம்மாள் தன்னுடைய மருமகனை கண்டித்துள்ளார்.
இதனால் கோபமடைந்த முருகன் காய்கறி வெட்டும் கத்தியை எடுத்துக்கொண்டு பொன்னம்மாளின் மார்புப்பகுதியில் குத்தியுள்ளார். இதனால் படுகாயமடைந்த பொன்னம்மாள் மயங்கி விழுந்துள்ளார். இதையடுத்து அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து கீழக்கரை காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து முருகனை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். பத்து பிள்ளைகளை பெற்று கரை சேர்த்த பொன்னம்மாள் மருமகனால் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.