சென்னையில் சசிகலாவை வரவேற்று ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் வீட்டருகே போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. கடந்த சில நாட்களாகவே அதிமுக பல்வேறு நலத் திட்டங்களை மக்களுக்கு தொடர்ந்து செய்து வருகிறது.
இதற்கு மத்தியில் சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைத் தண்டனை அனுபவித்து கொண்டிருந்த சசிகலா கடந்த ஜனவரி 27-ஆம் தேதி சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார். அவர் நாளை தமிழகத்திற்கு வர இருப்பதால், அரசியலில் ஏதாவது மாற்றம் ஏற்படுமா என்று அனைத்து தரப்பினரும் குழப்பத்தில் உள்ளனர். மேலும் சசிகலாவின் வருகை தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
இந்நிலையில் சென்னையில் முதல்வர் மற்றும் துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் குடியிருப்பு உள்ள கிரீன்வேஸ் சாலை பகுதியில் சசிகலாவுக்கு ஆதரவாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. போஸ்டர்களில் ராஜமாதாவே வருக என்பது போன்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. இது அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.