கூட்டணி என்ற வார்த்தையே தமிழில் எனக்கு பிடிக்காது என்று பிரேமலதா விஜயகாந்த் பரபரப்பு கருத்தை கூறியுள்ளார்.
தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. கடந்த சில நாட்களாகவே அதிமுக பல்வேறு நலத் திட்டங்களை மக்களுக்கு தொடர்ந்து செய்து வருகிறது.
இதற்கு மத்தியில் சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைத் தண்டனை அனுபவித்து கொண்டிருந்த சசிகலா கடந்த ஜனவரி 27-ஆம் தேதி சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார். அவர் நாளை தமிழகத்திற்கு வர இருப்பதால், அரசியலில் ஏதாவது மாற்றம் ஏற்படுமா என்று அனைத்து தரப்பினரும் குழப்பத்தில் உள்ளனர். மேலும் சசிகலாவின் வருகை தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. இதனைத் தொடர்ந்து கூட்டணி குறித்த குழப்பம் நிலவி வருகிறது.
இந்நிலையில், “கூட்டணி என்ற வார்த்தையை தமிழில் எனக்கு பிடிக்காது, நிர்வாகிகள் நிர்பந்தம் செய்ததால்தான் கடந்த தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்தோம்” என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர் கூறியுள்ள கருத்தை வைத்துப் பார்க்கும்போது வருகின்ற சட்டமன்ற தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.