Categories
தேசிய செய்திகள்

கிணற்றிலிருந்து வெளியான வாயு… 10 வருடங்களாக பயன்படுத்திய குடும்பம்… அனைவரின் கவனத்தையும் ஈர்த்த ஆச்சரியம்…!!

கடந்த 10 ஆண்டுகளாக வீட்டின் கிணற்றிலிருந்து கிடைத்த வாயுவை பயன்படுத்தி பெண்  சமையல் செய்த சம்பவம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

கேரள மாநிலத்தில் உள்ள ஆராட்டு வளி பகுதியில் ரமேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரத்தினம்மா என்ற மனைவி உள்ளார். இவர்கள் குடிநீருக்காக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தங்கள் வீட்டில் கிணறு தோண்டி உள்ளனர். ஆனால் அந்த கிணற்றில் உள்ள நீரின் நிறமானது மாறி காணப்பட்டுள்ளது. அந்த கிணற்றை மூடிவிட்டு அவர்கள் அதன் அருகில் வேறொரு கிணறு தோண்டும் போது அதிலிருந்து வித்தியாசமான வாயு வெளியேறி உள்ளது. அந்த வாயுவை அவர்கள் சுவாசித்த போது அது சமையல் எரிவாயு போன்று இருந்ததாக அவர்கள் உணர்ந்துள்ளனர்.

இதனையடுத்து அந்த வாயுவை ரமேசன்-ரத்தினம்மா தம்பதியினர் பற்ற வைக்கும்போது அது இருந்ததை கண்டு ஆச்சரியப்பட்டனர். இதனைத் தொடர்ந்து ஒரு குழாய் மூலம் அந்த வாயுவை வீட்டு சமையலறைக்கு கொண்டு செல்வதற்கு அவர்கள் திட்டமிட்டு ஒரு பிளம்பரை அழைத்து அதற்கான ஏற்பாடு செய்துள்ளனர். அந்த வாயுவை குழாய் மூலம் சமையலறையில் உள்ள அடுப்புடன் இணைத்து அதனை பற்ற வைத்த போது அது எரிந்து விட்டது.

இந்நிலையில் கடந்த 10 ஆண்டுகளாக அந்த குடும்பத்தினர் அந்த வாயுவைக் கொண்டு வீட்டில் அனைத்து சமையல் வேலைகளையும் பார்த்து வந்துள்ளனர். இதனையடுத்து பெட்ரோலிய துறை அதிகாரிகளுக்கு அக்கம்பக்கத்தினர் மூலம் இந்த வாயு குறித்து தெரியவந்ததால் அவர்கள் உடனடியாக ரமேசன் வீட்டிற்கு சென்று அந்த கிணற்றை பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளனர். இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, வாயு கசிவானது இதுபோன்று ஏற்படுவது இயற்கையான நிகழ்வு என்றாலும், எங்கள் துறையின் உயர் அதிகாரிகள் இது குறித்து விரிவான ஆய்வு மேற்கொள்வர் என்று தெரிவித்துள்ளனர்.

மேலும் இதுகுறித்து ரத்தினம்மா கூறும்போது, எங்கள் வீட்டு கிணற்றில் இருந்து வந்த இந்த வாயுவின் மூலமே அனைத்து சமையல் வேலைகளையும் தான் செய்து வருவதாகவும், இந்த கிணற்றிலிருந்து மழைக்காலங்களில் மட்டும் வாயு வெளியேறாது என கூறியுள்ளார். இதனால் அந்த சமயத்தில் மட்டும் அரசின் சமையல் கேஸை பயன்படுத்தி கொள்வதாக தெரிவித்துள்ளார்.

Categories

Tech |