தமிழகத்தில் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகள் திறப்பது பற்றி தீவிர ஆலோசனை நடத்தி வருவதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இதற்கு மத்தியில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நெருங்கிக் கொண்டிருப்பதால், மாணவர்களின் பெற்றோர்களிடம் பள்ளிகள் திறப்பது பற்றி கருத்து கேட்கப்பட்டது. அதற்கு 90% பெற்றோர்கள் சம்மதம் தெரிவித்த நிலையில் ஜனவரி 19ஆம் தேதி 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது.
தற்போது அரசு பள்ளிகளில் 92 சதவீத மாணவர்கள் வருகை புரிந்துள்ளதால் வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன.இவர்களுக்கு ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை தவிர பிற நாட்களில் வாரத்தில் ஆறு நாட்களுக்கு என பள்ளிகள் செயல்படும் என்று அறிவித்துள்ளது. இதனையடுத்து நாளை 9 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப் படுகின்றன. அவர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் பள்ளிகள் திறப்பதில் தாமதம் செய்ய முடியாது என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஏற்கனவே பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளதால் பள்ளிகள் திறப்பதில் தாமதம் செய்ய முடியாது. நாளை 9 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் பிற வகுப்புகளை திறக்கவும் ஆலோசனை நடத்தி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.