புடவையில் தொட்டில் கட்டி விளையாடும் போது கழுத்து இறுக்கி சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாகல்பட்டியை சார்ந்தவர் பன்னீர்செல்வம்-தமிழரசி தம்பதியினர். இவர்களுக்கு 3 பிள்ளைகள் இருந்தனர். பன்னீர்செல்வம் பெங்களூரில் தங்கி பணிபுரிந்து வருகிறார். அவரது மனைவியான தமிழரசி கூலிவேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் தமிழரசி நேற்று முன்தினம் கூலி வேலைக்கு சென்ற பிறகு மூன்று பிள்ளைகளும் புடவையில் தொட்டில் கட்டி விளையாடிக் கொண்டிருந்துள்ளனர். அப்போது புடவை செல்வராணி என்ற குழந்தையின் கழுத்தில் எதிர்பாராதவிதமாக சுற்றி கழுத்தை இறுக்கி உள்ளது. இதனால் மூத்த மகளான செல்வராணி மூச்சுத்திணறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து அவரது தங்கை கூச்சலிட்டதால் அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து தொட்டிலில் தொங்கிய நிலையில் செல்வராணி கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து அவர்கள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.