சாலையை கடக்க முயன்ற போது கார் மோதிய விபத்தில் மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் ராஜீவ் காந்தி நகரில் காந்தம்மாள் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்த மூதாட்டி அப்பகுதியில் மீன் வியாபாரம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் காந்தம்மாள் ஊரப்பாக்கம் டீக்கடை பேருந்து நிறுத்தம் அருகே சாலையை கடக்க முயன்ற போது, அவ்வழியாக வேகமாக சென்று கொண்டிருந்த கார் எதிர்பாராதவிதமாக காந்தம்மாள் மீது மோதி விட்டது.
இதில் பலத்த காயமடைந்த மூதாட்டியை அருகிலிருந்தவர்கள் மீட்டு உடனடியாக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த கூடுவாஞ்சேரி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.