ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் அமுலுக்கு வரும் முன்பே குறை கூற கூடாது என்று அதிமுக அமைச்சர் கடம்பூர் ராஜு கருத்து தெரிவித்துள்ளார்.
ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு என்ற திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி ஒரு இந்திய குடிமகன் இந்தியாவின் எந்த மூலையில் வசித்தாலும் அங்கே அருகாமையில் உள்ள ரேஷன் கடையில் சென்று ரேஷன் பொருட்களை வாங்கி கொள்ளலாம் என்பதே இத்திட்டத்தின் பிரதான செயல்பாடு ஆகும். இதன் மூலம் இந்திய மக்களை எளிதாக ஒருங்கிணைக்க முடியும் என்று மத்திய அரசு கூறியுள்ளது.
அதன்படி, அடுத்த ஆண்டு ஜூலை மாதத்திற்குள் இத்திட்டத்தை அனைத்து மாநிலங்களும் அமல்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. தமிழகம் உள்ளிட்ட 10 மாநிலங்கள் இதனை நடைமுறைப்படுத்த அதிவிரைவாக தீவிரம் காட்ட வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளது.இதனைத்தொடர்ந்து கோவில்பட்டியில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக அமைச்சர் கடம்பூர் ராஜு இது குறித்து கூறுகையில்,
ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் அமுலுக்கு வரும் முன்பே குறை கூறுவது சரியானது அல்ல. எந்த ஒரு திட்டமாக இருந்தாலும் அமுலுக்கு வந்த பின் குறை இருந்தால் அதன் பின் கூறுவதே சரியானது. இதற்கு முன்பாக ஜிஎஸ்டி திட்டமானது அமலுக்கு வருவதற்கு முன்பே பலரும் குறை கூறி வந்த நிலையில் தற்போது அந்த குறைகளை எல்லாம் தாண்டி நாடு முழுவதும் ஜிஎஸ்டி அமுலில் இருந்து வருகிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.