3000 ரூபாய் லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விழுப்புரம் மாவட்டத்திலுள்ள விஷ்வரெட்டி பாளையம் கிராமத்தில் பன்னீர்செல்வம் என்ற விவசாயி வசித்து வருகிறார். இவர் அதே கிராமத்தில் 1 ஏக்கர் 70 சென்ட் நிலத்தை தனது அண்ணன் ரங்கநாதன் என்பவரிடம் இருந்து பெற்றுள்ளார். இந்நிலையில் அந்த நிலத்தை தனது பெயருக்கு பட்டா மாற்றம் செய்து தருமாறு பன்னீர்செல்வம் கிராம நிர்வாக அலுவலரான விஸ்வரங்கன் என்பவரிடம் கேட்டுள்ளார். இதனையடுத்து பன்னீர்செல்வம் பெயருக்கு பட்டா மாற்றம் செய்து தர வேண்டுமானால் 3,000 ரூபாயை லஞ்சமாக தர வேண்டுமென விசுவநாதன் கூறியுள்ளார்.
இதனை தொடர்ந்து விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் பன்னீர்செல்வம் இதுகுறித்து புகார் அளித்தார். அதன்பின் ரசாயனப் பொடி தடவிய பணத்தை பன்னீர்செல்வம் அதிகாரிகள் கூறிய அறிவுரையின் படி கிராம நிர்வாக அலுவலகத்திற்கு சென்று விஸ்வரங்கனிடம் கொடுத்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் விரைந்து சென்று கிராம நிர்வாக அலுவலர் விஸ்வரங்கனை கையும் களவுமாக பிடித்து விட்டனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.