சட்டப்பேரவை கூட்டத்தொடரின் 2ம் நாளான இன்று வனத்துறை மற்றும் சுற்றுசூழல் துறை ரீதியான மானியக் கோரிக்கைகள் குறித்து பேசப்படவுள்ளன.
கடந்த 28ஆம் தேதியன்று தொடங்கிய சட்டப்பேரவை கூட்டத் தொடரின் முதல் நாளன்று மறைந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்தி கூட்டத்தை மறுநாளன்று ஒத்தி வைத்தனர். இந்நிலையில் இன்று நடைபெற இருக்கக்கூடிய சட்டப்பேரவை கூட்டத்தொடரில் துறை ரீதியான மானிய கோரிக்கைகள் தாக்கல் செய்யப்படவுள்ளன.
எதிர்க்கட்சிகளின் கவன ஈர்ப்பு தீர்மானம்:
அதன்படி கல்வித் துறை ரீதியான கேள்விகளை ஓ.பன்னீர்செல்வம் எழுப்ப அதற்கான விடைகளை கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அளித்து உள்ளார். இதனை தொடர்ந்து மானியக் கோரிக்கைகளை வலியுறுத்தியதோடு மட்டுமல்லாமல் தமிழகத்தில் தற்போது இருக்கக்கூடிய முக்கிய பிரச்சனைகளில் கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டுவர எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
குறிப்பாக தமிழகத்தில் தற்போது அதிகமாக நிலவிவரும் தண்ணீர் பிரச்சனை,போக்குவரத்து ஊழியர்களுக்கான பிரச்சனை,கண்டெய்னர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் உள்ளிட்ட பிரச்சினைகளை முன்னிறுத்தி எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்ப உள்ளன.
அணுக்கழிவு மையம் :
இதன்பின் சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை ரீதியான மானிய கோரிக்கைகளை மையப்படுத்தி இன்றைய சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தில் அணுக்கழிவு மையம் அமைப்பது குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்ப உள்ள நிலையில் அதற்கு முதலமைச்சரும் அத்துறையைச் சார்ந்த அமைச்சரும் பதில் அளிக்க உள்ளனர்.
அதன்படி வனத் துறை சார்பாக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அவர்கள் மானிய கோரிக்கை தாக்கல் செய்ய உள்ளார், அவரை தொடர்ந்து சுற்றுச்சூழல் துறை சார்பாக மானியக் கோரிக்கையை அமைச்சர் கே சி கருப்பண்ணன் அவர்கள் தாக்கல் செய்ய உள்ளார்.