உத்தரகாண்டில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் சிக்கி 150 பேர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
உத்தரகாண்ட் மாநிலத்தில் சமோலி மாவட்டத்தில் உள்ள ஜோஷிமாத் பகுதியில் நந்தாதேவி பனிமலை அமைந்திருக்கிறது. இந்த பனிமலை இன்று திடீரென உடைந்ததால் ரேனி கிராமத்திலுள்ள ரிஷிகங்கா மின் நிலையம் அருகே பெரிய அளவிலான பனிப்பாறைகள் சரிந்து விழுந்து வேகமாக உருகியதால் தவுலிகங்கா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்த வெள்ளப்பெருக்கு திடீரென்று ஏற்பட்டதால் ஆற்றின் கரையோரத்தில் உள்ள ஏராளமான வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. சுமார் 100 முதல் 150 பேர் இந்த வெள்ளப்பெருக்கில் உயிரிழந்திருக்கலாம். மேலும் 150 ஆடு மாடுகளுடன் கால்நடை மேய்க்கும் 5 பேர் வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்டுள்ளனர். இதற்கிடையில் நீர்மின் நிலையத்தில் வேலை பார்த்த 16 பேர் சுரங்கத்தில் சிக்கி கொண்டனர். அவர்களை இந்திய-தீபத்தை போலீசார் மீட்டுள்ளனர் என மாநில தலைமைச் செயலாளர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார்.
இந்த வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு நடவடிக்கைகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. இந்த கடினமான சமயத்தில் மாநில அரசுக்கு துணையாக மத்திய அரசு துணை நிற்கும் என மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா உறுதி அளித்துள்ளார். மேலும் டெல்லியில் இருந்து தேசிய பேரிடர் மீட்புப் படையின் மூன்று குழுக்கள் ஏற்கனவே உத்ரகாண்ட் சென்றுள்ளதாகவும் தேவைப்பட்டால் கூடுதல் குழுக்களை அனுப்ப தயார் நிலையில் மீட்பு படையினர் இருப்பதாகவும் கூறியுள்ளார்.
உத்தரகாண்ட் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு 600 ராணுவ வீரர்கள் சென்றிருப்பதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் மீட்பு படையினருக்கு உதவுவதற்காக டேராடூனில் விமானப்படையின் எம்ஐ17 ரக ஹெலிகாப்டர்கள் தயார் நிலையில் உள்ளதாகவும் தேவைப்பட்டால் கூடுதல் ஹெலிகாப்டர்கள் வழங்கப்படும் என்றும் விமானப்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ரேனி கிராமத்தின் அருகே முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் பார்வையிட்டு ஆய்வு செய்து ராணுவ வீரர்களிடம் பாதிப்பு நிலவரம் குறித்து கேட்டு தெரிந்து கொண்டார்.
உத்தரகாண்ட் மாநிலத்திற்கு இந்தியாவின் அனைத்து மாநிலங்களும் துணை நிற்பதாகவும் அனைவரும் பாதுகாப்பாக இருக்கவேண்டும் என்று தேசமே பிரார்த்தனை செய்வதாகவும் பிரதமர் மோடி கூறியுள்ளார். இதேபோல் உத்தரகாண்டில் ஏற்பட்ட பேரிடர் குறித்து பல்வேறு தலைவர்கள் தங்கள் பிரார்த்தனைகளையும் கவலைகளையும் தெரிவித்து வருகின்றனர்.