கார் டிரைவரிடம் செல்போனை திருடிய நபரை பிடித்து பொது மக்கள் போலீசாரிடம் ஒப்படைத்து விட்டனர்.
தென்காசி மாவட்டத்திலுள்ள ஆவாரம்பட்டி பகுதியில் பாலமுருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கார் டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் சென்னைக்கு ராஜபாளையத்திலிருந்து அரசு பேருந்தில் பயணம் செய்துள்ளார். அந்த பேருந்து விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகே வந்தபோது யாரோ ஒரு மர்ம நபர் பாலமுருகனின் பேண்ட் பாக்கெட்டில் இருந்த அவரது செல்போனை திருடிக் கொண்டு அங்கிருந்து தப்பிச் செல்ல முயற்சி செய்துள்ளார். இதனையடுத்து பாலமுருகன் மற்றும் அவருடன் இருந்தவர்கள் அந்த நபரை மடக்கிப் பிடித்து விட்டனர்.
அதன் பின் அந்த நபரை விழுப்புரம் தாலுகா காவல் நிலையத்தில் ஒப்படைத்து விட்டனர். அந்த நபரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள நயினார் குப்பம் பகுதியில் வசித்து வரும் கூலித் தொழிலாளியான ரவி என்பது போலீசாருக்கு தெரிய வந்துள்ளது. மேலும் அவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்ததோடு, அவரிடம் இருந்த செல்போனை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.