தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட மாணவி அளித்த வாக்குமூலத்தின் மூலம் விக்கி என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசியில் 17 வயது மாணவி வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் பி.பி.ஏ முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் திடீரென தனது வீட்டு மாடியில் உள்ள குளியலறையில் அந்த மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து அவரை மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அப்போது உயிருக்கு போராடிக்கொண்டிருந்த மாணவியிடம் மாஜிஸ்திரேட்டு மரண வாக்குமூலம் வாங்கியுள்ளார்.
அப்போது அந்த மாணவி தான் தீக்குளிப்பதர்கான காரணம் குறித்து கூறும்போது, கடந்த சில மாதங்களுக்கு முன்பு அந்த மாணவியின் செல்போன் எண்ணிற்கு ஒரு தவறுதலான அழைப்பு வந்ததாகவும், அதில் பேசிய நபர் தான் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டி பகுதியில் வசித்து வரும் விக்கி என்கிற வெங்கடேஸ்வரன் என்று கூறியுள்ளார், அதோடு தான் கல்லூரியில் மூன்றாமாண்டு படித்துக் கொண்டிருப்பதாகவும், அதன் பின் இருவரும் நட்பாக பேசி பழகி உள்ளனர். இதனையடுத்து சிவகாசிக்கு வந்த விக்கி அந்த மாணவியை சித்துராஜபுரம் பகுதிக்கு இருசக்கர வாகனத்தில் அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்து விட்டார்.
இந்நிலையில் மாணவியிடம் பேசிய விக்கி இருவரும் தனிமையில் நெருக்கமாக இருக்கும் ஆபாச வீடியோவை செல்போனில் பதிவு செய்து விட்டதாகவும், அந்த காட்சிகளை தனது நண்பர்களுக்கு அனுப்பி விட்டதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்து வெளியில் சொன்னால் உனக்கு தான் அவமானம் என்று கூறி அந்த மாணவியை மிரட்டி இருக்கிறார். இதனால் மனமுடைந்த மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதாக வாக்குமூலம் அளித்துள்ளார். மேலும் அந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த சிவகாசி டவுன் போலீசார் குற்றவாளியான விக்கியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.