மதுரையில் பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் அமைச்சர் செல்லூர் உடனே கிளம்பிச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. கடந்த சில நாட்களாகவே அதிமுக பல்வேறு நலத் திட்டங்களை மக்களுக்கு தொடர்ந்து செய்து வருகிறது.
இதற்கு மத்தியில் சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைத் தண்டனை அனுபவித்து கொண்டிருந்த சசிகலா கடந்த ஜனவரி 27-ஆம் தேதி சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார். அவர்இன்று தமிழகத்திற்கு வர இருப்பதால், அரசியலில் ஏதாவது மாற்றம் ஏற்படுமா என்று அனைத்து தரப்பினரும் குழப்பத்தில் உள்ளனர். மேலும் சசிகலாவின் வருகை தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
இந்நிலையில் மதுரையில் அமைச்சர் செல்லூர் ராஜூ நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, சசிகலா வருகை குறித்து பத்திரிக்கையாளர்கள் எழுப்பிய கேள்வியை கேட்டு மிரண்டு போன அவர், என்ன சொல்வது என்று தெரியாமல் கேள்விக்கு பதிலளிக்காமல் சமாளித்தார். மீண்டும் சசி குறித்து கேள்வி வந்துவிடுமோ என்ற அச்சத்தில் விறுவிறுவென நடையை கட்டினார்.