ஓசூர் எல்லையில் சசிகலாவுக்கு வரவேற்பு அளிக்க உள்ள நிலையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதால் பரபரப்பு நிலவி வருகிறது.
சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் தண்டனை அனுபவித்து கொண்டிருந்த சசிகலா கடந்த ஜனவரி 27-ஆம் தேதி, தனது 4 ஆண்டுகள் சிறை வாசத்தை முடித்து விடுதலையானார். ஆனால் அவரின் உடல் நலக்குறைவு காரணமாக பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அதன்பிறகு டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட அவர் கொரோனா பாதிப்பு காரணமாக வீட்டில் தன்னைத்தானே தனிமைப் படுத்திக் கொண்டிருந்தார்.
இந்நிலையில் பெங்களூருவில் இருந்து சசிகலா இன்று தமிழகம் வருகிறார். அதன்படி சில நிமிடங்களுக்கு பெங்களூருவில் இருந்து சென்னை புறப்பட்ட சசிகலாவிற்கு ஆரத்தி எடுத்து பெண்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்நிலையில் ஓசூர் எல்லையில் வரவேற்பு அளிக்க உள்ள இடத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதிமுக கொடி சசிகலா காரில் பொருத்தப்பட்டதை அடுத்து போலீஸ் குவிக்கப்பட்டுள்ளதால் அங்கு அசாதாரணமான சூழல் நிலவி வருகிறது. இதனால் என்ன நடக்கப்போகிறது என்று நொடிக்கு நொடி பரபரப்பு அதிகரித்துள்ளது.