தேனி மாவட்டத்தில் சசிகலா படத்தை போட்டு அதில் இணைந்தால் பங்கு இல்லையேல் சங்கு என்ற வாசகத்தை அச்சிட்டு ஒட்டப்பட்ட சுவரொட்டி புகைப்படம் வைரலாகி வருகிறது.
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து கொண்டிருந்த சசிகலா, தனது நான்கு ஆண்டுகள் சிறை வாசத்தை முடித்து, கடந்த ஜனவரி 27 ஆம் தேதி பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையிலிருந்து விடுதலையானார். ஆனால் தனது உடல் நலக்குறைவு காரணமாக பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அதன் பிறகு உடல் நலம் தேறிய தான் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட அவர் கொரோனா பாதிப்பு காரணமாக பெங்களூருவில் தன்னைத் தனிமைப் படுத்திக் கொண்டிருந்தார்.
இந்நிலையில் பெங்களூருவில் இருந்து இன்று சசிகலா தமிழகம் திரும்பியுள்ளார். தமிழக எல்லையில் அவரின் ஆதரவாளர்கள் ஆரவார வரவேற்பு அளித்தனர். அவர் ஓசூர் ஜூஜூவாடி அருகே வந்து கொண்டிருந்த போது அவரின் காரில் அதிமுக கொடி பறந்தால், கார் தடுத்து நிறுத்தப்பட்டது. அதன் பிறகு வேறு ஒரு காரில் சென்னை நோக்கி அவர் புறப்பட்டார். தமிழகத்தில் சசிகலா வருகையை ஒட்டி பல்வேறு இடங்களில் அவரின் ஆதரவாளர்கள் போஸ்டர் ஒட்டியுள்ளனர்.
அதிலும் குறிப்பாக சர்ச்சைக்குரிய சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதன் ஒரு பகுதியாக தேனி மாவட்டத்தில் சசிகலா படத்தை போட்டு, “இணைந்தால் பங்கு, இல்லையேல் சங்கு”என்ற வாசகத்தை அச்சிட்டு அதிமுகவினர் அடித்துள்ள சுவரொட்டியின் புகைப்படம் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.