தமிழகத்தில் தீவிர அரசியலில் ஈடுபடுவேன் என்று சசிகலா செய்தியாளர்களுக்கு பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து கொண்டிருந்த சசிகலா, தனது நான்கு ஆண்டுகள் சிறை வாசத்தை முடித்து, கடந்த ஜனவரி 27 ஆம் தேதி பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையிலிருந்து விடுதலையானார். ஆனால் தனது உடல் நலக்குறைவு காரணமாக பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அதன் பிறகு உடல் நலம் தேறிய தான் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட அவர் கொரோனா பாதிப்பு காரணமாக பெங்களூருவில் தன்னைத் தனிமைப் படுத்திக் கொண்டிருந்தார்.
இந்நிலையில் பெங்களூருவில் இருந்து இன்று சசிகலா தமிழகம் திரும்பியுள்ளார். தமிழக எல்லையில் அவரின் ஆதரவாளர்கள் ஆரவார வரவேற்பு அளித்தனர். அவர் ஓசூர் ஜூஜூவாடி அருகே வந்து கொண்டிருந்த போது அவரின் காரில் அதிமுக கொடி பறந்தால், கார் தடுத்து நிறுத்தப்பட்டது. அதன் பிறகு வேறு ஒரு காரில் சென்னை நோக்கி அவர் புறப்பட்டார்.
இந்நிலையில் சென்னை வந்து கொண்டிருக்கும் சசிகலா வாணியம்பாடி அருகே செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, அன்புக்கு நான் அடிமை என்ற எம்ஜிஆர் பாடலை சுட்டிக்காட்டிப் பேசிய அவர், நிச்சயமாக தீவிர அரசியலில் ஈடுபடுவேன். மிக விரைவில் மக்களை சந்திப்பேன் என்றார். மேலும் அவசரமாக ஜெயலலிதா நினைவிடம் மூடப்பட்டது எதைக் காட்டுகிறது என்பது மக்களுக்கு தெரியும் என்றும் அவர் கூறியுள்ளார்.