அரசுக்கு நல்ல பெயர் வந்துவிடக் கூடாது என்பதற்காக விவசாயிகள் தன்னுடைய வீட்டை முற்றுகையிட்டு வருவதாக அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
நாமக்கல் அருகே உயர் மின் கோபுரம் அமைப்பதற்கு நிவாரண தொகை வழங்கக்கோரி விவசாயிகள் அமைச்சர் தங்கமணி வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தங்கமணி திட்டமிட்டு இந்த போராட்டத்தை நடத்தி வருவதாக தெரிவித்தார். தொடர்ந்து பாமகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிக்கிறதா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் பேச மறுத்துவிட்டார். மேலும் சசிகலா வருகை குறித்து எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்காமல் அமைச்சர் தங்கமணி அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.
விவசாயிகளுக்கு நாங்கள் எந்த அரசு ஆணை வழங்கினோமோ அந்த அரசாணைப்படி தொகை வழங்கப்பட்டு கொண்டிருக்கின்றது. என்னிடம் இரண்டு மூன்று முறை பேச்சுவார்த்தை நடத்தினார்கள். எந்த மாவட்டத்தில் அரசாணை வெளியிட்டு அதற்கான தொகை வரவில்லையோ சொல்லுங்கள், அதனுடைய பட்டியலை கொடுங்கள் அந்த மாவட்ட ஆட்சியரிடம் சொல்லி நான் உடனடியாக நிதியை பெற்று தருகிறேன் என்று சொன்னேன்.
ஆனால் இதுவரை அந்த பட்டியலை கொடுக்கவில்லை. ஆனால் அரசியலுக்காக என்னுடைய வீட்டை முற்றுகையிடுகிறார்கள். இது விவசாயிகளுடைய அரசு. முதல்வர் கூட 12110 கோடி ரூபாய் தள்ளுபடி செய்து இருக்கின்றார்கள். அரசுக்கு நல்ல பெயர் வந்துவிடக் கூடாது என்பதற்காக வேண்டுமென்றே திட்டமிட்டு செய்கின்ற சதி என அமைச்சர் கூறினார்.