அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜு மற்றும் சசிகலா விரைவில் சந்திக்க உள்ளதாக டிடிவி தினகரன் தகவல் தெரிவித்துள்ளார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்துக் கொண்டிருந்த சசிகலா, தனது 4 ஆண்டுகள் சிறை வாசத்தை முடித்து கடந்த ஜனவரி 27-ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டார். அதன் பிறகு உடல் நலக்குறைவு காரணமாக பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். ஆனால் கொரோனா பாதிப்பு காரணமாக பெங்களூரில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டிருந்தார்.
இந்நிலையில் பெங்களூருவில் இருந்து நேற்று சசிகலா தமிழகம் திரும்பினார். அப்போது அவர் வரும் வழியில் பல்வேறு இடையூறுகள் ஏற்பட்டன. சசிகலா தமிழக எல்லையில் நுழைந்தவுடன் ஆதரவாளர்கள் பட்டாசுகள் வெடித்து ஆரவாரத்துடன் வரவேற்றனர். பெங்களூருவில் இருந்து சுமார் 23 மணி நேர பயணத்திற்கு பிறகு இளவரசியின் மகள் கிருஷ்ண பிரியாவின் இல்லம் வந்தார் சசிகலா.
அதிகாலை 4 மணிக்கு ராமாபுரம் இல்லத்தில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன்பிறகு 7.20 மணியளவில் சென்னை டி நகர் அபிபுல்லா சாலையில் உள்ள கிருஷ்ண பிரியாவின் இல்லத்திற்கு ஓய்வு எடுக்க வந்தபோது தொண்டர்கள் ஆரத்தி எடுத்து மலர்தூவி மேளதாளத்துடன் வரவேற்றனர். இரவு முழுவதும் தூங்காமல் இருந்த சசிகலா தற்போது ஓய்வு எடுக்கச் சென்றுள்ளார்.
இந்நிலையில் அதிமுகவில் ஸ்லீப்பர் செல்கள் உள்ளன. அவர்கள் எம்எல்ஏ வாக இருக்க வேண்டிய அவசியமில்லை என்று டிடிவி தினகரன் சூசகமாக புதிய தகவலை தெரிவித்துள்ளார். அமைச்சர் செல்லூர் ராஜூ உள்ளிட்ட தென் மாவட்ட அமைச்சர்கள் விரைவில் சசிகலாவை சந்திப்பார்கள் என்று தகவல் வெளியான நிலையில், டிடிவி தினகரன் இந்தக் கருத்து மேலும் வலு சேர்க்கிறது. அதனால் விரைவில் அதிமுகவில் புதிய புயல் கிளம்பும் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.