ஜெயலலிதா நினைவிடம் திறக்கப்பட்டதும் சசிகலா அங்கு செல்வார் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்துக் கொண்டிருந்த சசிகலா, தனது 4 ஆண்டுகள் சிறை வாசத்தை முடித்து கடந்த ஜனவரி 27-ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டார். அதன் பிறகு உடல் நலக்குறைவு காரணமாக பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். ஆனால் கொரோனா பாதிப்பு காரணமாக பெங்களூரில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டிருந்தார்.
இந்நிலையில் பெங்களூருவில் இருந்து நேற்று சசிகலா தமிழகம் திரும்பினார். அப்போது அவர் வரும் வழியில் பல்வேறு இடையூறுகள் ஏற்பட்டன. சசிகலா தமிழக எல்லையில் நுழைந்தவுடன் ஆதரவாளர்கள் பட்டாசுகள் வெடித்து ஆரவாரத்துடன் வரவேற்றனர். பெங்களூருவில் இருந்து சுமார் 23 மணி நேர பயணத்திற்கு பிறகு இளவரசியின் மகள் கிருஷ்ண பிரியாவின் இல்லம் வந்தார் சசிகலா.
அதிகாலை 4 மணிக்கு ராமாபுரம் இல்லத்தில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன்பிறகு 7.20 மணியளவில் சென்னை டி நகர் அபிபுல்லா சாலையில் உள்ள கிருஷ்ண பிரியாவின் இல்லத்திற்கு ஓய்வு எடுக்க வந்தபோது தொண்டர்கள் ஆரத்தி எடுத்து மலர்தூவி மேளதாளத்துடன் வரவேற்றனர். இரவு முழுவதும் தூங்காமல் இருந்த சசிகலா தற்போது ஓய்வு எடுக்கச் சென்றுள்ளார்.
இந்நிலையில் ஜெயலலிதா நினைவிடம் திறக்கப்பட்டதும் சசிகலா அங்கு செல்வார் என்ற டிடிவி தினகரன் தகவல் தெரிவித்துள்ளார். காவல்துறையை ஏவிவிட்டு எங்களை மிரட்டலாம் என்று நினைக்கிறார்கள். காவல்துறை எச்சரிக்கை விடுத்திருந்ததால் தொண்டர்கள் ஆங்காங்கே படைகளை போல முகாமிட்டு இருந்தனர். கடந்த இரண்டு நாட்களாக பல்வேறு தரப்பிலிருந்து நெருக்கடி கொடுக்கப்பட்டது என்று அவர் தெரிவித்துள்ளார்.