தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பாக முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுபவர்களில் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு வழங்கப்படும் முன்னுரிமை குறித்த விளக்கம் மற்றும் PSTM சான்றிதழ் குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.
TNPSC தேர்வர்களின் நலனைக் கருத்தில் கொண்டு நடைமுறையில் உள்ள சட்ட விதிகள், அரசாணை, தேர்வாணைய நடைமுறைகள் எனப் பலவற்றில் விண்ணப்பதாரர்களுக்கான அறிவுரைகள் வெளியிடப்பட்டு வருகின்றன. இதில் ஜனவரி 30ம் தேதி முதல் திருத்தங்கள் செய்யப்பட்டு உள்ளது. அதன்படி தற்போது பணியிலிருந்து கொண்டு TNPSC தேர்வெழுதும் தேர்வர்கள் ‘தடையின்மை சான்றிதழை’ சமர்ப்பிக்க அல்லது பதிவேற்றம் செய்யத் தவறினால் அவர்களின் விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.
மாநிலத்தின் நேரடி நியமனத்தின் வாயிலாக நிரப்பப்படும் பணியிடங்களுக்கான விதிகளின் கல்வித்தகுதி வரை தமிழ் வழியில் படித்தவர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படும். தமிழ் வழியில் படித்ததற்கான (PSTM – Person Studied in Tamil Medium) உரிமை கோரும் விண்ணப்பதாரர் அதற்கான சான்று ஆவணமாக, நிர்ணயம் செய்யப்பட்ட கல்வித்தகுதி வரை அனைத்து படிப்புகளையும் தமிழ் வழியில் மட்டுமே பயின்றதற்கான சான்றிதழைக் கட்டாயமாகப் பதிவேற்றம் / சமர்ப்பிக்க வேண்டும்.
உதாரணமாக ஒரு படிப்புக்குப் பத்தாம் வகுப்பு நிர்ணயிக்கப்பட்ட கல்வித்தகுதியாக இருப்பின், விண்ணப்பதாரர் 10ம் வகுப்புவரை கட்டாயம் தமிழ் வழியில் படித்திருக்க வேண்டும். ஒரு படிப்புக்குப் பட்டப்படிப்பு கல்வித்தகுதியாக இருந்தால், விண்ணப்பதாரர் 10, 12 மற்றும் பட்டப்படிப்பு என மூன்றும் தமிழ் வழியில் கட்டாயம் பயின்றிருக்க வேண்டும் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.