ஒரே நாள் ஒரே நாளில் 49 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஒரு கிலோ 10 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்து விட்டனர்.
சென்னை மாவட்டத்திலுள்ள மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு துபாயில் இருந்து வந்த சிறப்பு விமானத்தில் பயணித்த பயணிகளை விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள் கண்காணித்தனர். அப்போது சந்தேகப்படும்படியான ஒரு நபரை அதிகாரிகள் நிறுத்தி விசாரித்தபோது, அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளார். அதன்பிறகு அவரை அதிகாரிகள் ஒரு அறைக்கு அழைத்து சென்று சோதனை செய்தபோது, அவர் ஆடைக்குள் மறைத்து வைத்திருந்த 17 லட்ச ரூபாய் மதிப்புள்ள 350 கிராம் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து விட்டனர்.
மேலும் அவர்கள் நடத்திய விசாரணையில் அந்த நபர் சென்னை மாவட்டத்தில் வசித்து வரும் ஹாரூன் ரஷீத் என்பது போலீசாருக்கு தெரிய வந்துள்ளது. இதனை தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டத்தில் வசித்து வரும் முகமது என்ற பயணி சார்ஜாவில் இருந்து கடத்தி வந்த 32 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 560 கிராம் தங்கத்தையும் சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்து விட்டனர். எனவே மொத்தம் 49 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஒரு கிலோ 10 கிராம் தங்கத்தை சென்னை விமான நிலையத்தில் ஒரே நாளில் சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்ததோடு, தங்கத்தை கடத்திய குற்றத்திற்காக முகமது மற்றும் ஹாரூன் ரஷீத் என்பவர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.