சென்னையில் குடிநீர் தேவை அதிகரித்துள்ளதால் வீராணம் ஏரியில் இருந்து 60 கன அடி தண்ணீர் அனுப்பப்படுகிறது.
கடலூர் மாவட்டத்தில் உள்ள லால்பேட்டை பகுதியில் 47.50 அடி கொள்ளளவு உடைய வீராணம் ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரியில் இருந்து கிடைக்கும் தண்ணீரால் சுமார் 44 ஆயிரத்து 856 ஏக்கர் விவசாய நிலம் பயனடைகிறது. அதோடு இந்த வீராணம் ஏரியானது சென்னை நகர மக்களின் தாகத்தை தீர்ப்பதிலும் முக்கிய பங்காற்றுகிறது. இந்நிலையில் காட்டுமன்னார்கோவில் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் வீராணம் ஏரியின் நீர் மட்டம் ஆனது குறைய ஆரம்பித்துவிட்டது.
இதனால் 43.80 அடியாக இருந்த நீர்மட்டம் 42.92 அடியாக குறைந்துவிட்டது. மேலும் செங்கல் மற்றும் வடவாறு ஓடையில் இருந்து வீராணம் ஏரிக்கு தண்ணீர் வருவதில்லை. இதனால் நாளுக்கு நாள் ஏரியின் நீர் மட்டமானது குறைந்துகொண்டே வருகிறது. இந்நிலையில் வீராணம் ஏரியில் இருந்து ராட்சத குழாய் மூலம் சென்னை மக்களின் குடிநீருக்காக 54 கன அடி தண்ணீர் அனுப்பப்படுகிறது. இதனை அடுத்து சென்னையில் தண்ணீர் தேவை அதிகரித்துள்ளதால், வீராணம் ஏரியில் இருந்து தற்போது 60 கன அடி தண்ணீர் கூடுதலாக சென்னைக்கு அனுப்பப்படுகிறது என அதிகாரிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.