இருதரப்பினர் இடையே நடந்த மோதலில் அரசு பேருந்து கண்டக்டர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள குமாரலிங்கபுரம் பகுதியில் சந்தன மகாலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் தனது வீட்டிற்கு முன்பு நின்ற மரத்தின் கிளைகளை சந்தனமகாலிங்கம் வெட்டியதால் அந்தப் பகுதியில் உள்ள மின் கம்பிகள் மீது மரகிளைகள் விழுந்து விட்டது. இதனால் அப்பகுதியில் உள்ள சில வீடுகளுக்கு செல்லும் மின்சாரம் தடைபட்டது. இந்நிலையில் சந்தன மகாலிங்கத்தின் பக்கத்து வீட்டில் வசித்து வரும் கூலி தொழிலாளியான சந்திரசேகர், அவருடைய தம்பி குணசேகரன் மற்றும் அதே பகுதியில் வசிக்கும் ஐயப்பன் போன்றோர் சந்தன மகாலிங்கத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனை தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் அவர்கள் அனைவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்துவிட்டனர்.
இந்நிலையில் சந்தன மகாலிங்கம் இரவு தனது வீட்டிலிருந்து வெளியே சென்ற போது, அவரை சந்திரசேகரன் உள்ளிட்ட 3 பேரும் வழிமறித்து தகராறு செய்ததோடு, அவர்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து சந்தன மகாலிங்கத்தை சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவலறிந்த பச்சகாரப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதனையடுத்து சந்தன மகாலிங்கத்தின் மனைவி சுதா அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்டக்டரை வெட்டி கொலை செய்த குற்றவாளிகளான சந்திரசேகரன் குணசேகரன் மற்றும் அய்யப்பன் ஆகிய 3 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.