நடிகை கௌரி கிஷன் ‘மாஸ்டர்’ படத்தின் நீக்கப்பட்ட காட்சி குறித்து பரவிய தகவலுக்கு விளக்கமளித்துள்ளார் .
தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய் நடிப்பில் பொங்கல் விருந்தாக வெளியான திரைப்படம் ‘மாஸ்டர்’ . இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் ,அர்ஜுன் தாஸ், சாந்தனு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். திரையரங்குகளில் வெளியான இந்த திரைப்படம் விமர்சன ரீதியாகவும் , வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது . இந்நிலையில் சமீபத்தில் மாஸ்டர் படத்தில் இருந்து நீக்கப்பட்ட காட்சியை அமேசான் பிரைம் வெளியிட்டது. அதில் விஜய் நாட்டில் நடக்கும் பாலியல் வன்முறைகளுக்கு பெண்களின் உடை தான் காரணம் என்று கூறும் பெரும்பான்மை சமூகத்தின் மனநிலைக்கு சரியான பதிலடி கொடுத்திருப்பார் . இப்படிப்பட்ட ஒரு காட்சியை படத்திலிருந்து ஏன் நீக்கினார்கள்? என்று பலரும் கேள்வி எழுப்பி வந்தனர் . மேலும் இந்த காட்சியில் விஜய் சீரியஸாக நடிக்கும்போது சவிதாவாக நடித்திருந்த கௌரி கிஷன் சிரித்து சொதப்பியதால் நீக்கப்பட்டதாக தகவல் பரவியது .
இதுகுறித்து நடிகை கௌரி கிஷன் ‘என்னை பொறுத்தவரை இயக்குனரின் முடிவை மதிக்கிறேன் . அவர் கதைக்கு தேவைப்பட்டிருந்தால் அந்த காட்சியை படத்தில் வைத்திருப்பார் . டீசரில் இடம்பெற்ற அந்த காட்சி படத்தில் இடம் பெறவில்லை . ஆனால் அமேசான் ப்ரைம் அந்த வீடியோவை வெளியிட்ட போது நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன் . இதன்பின் நான் சிரித்ததால் இந்த காட்சி படத்தில் இருந்து நீக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்தது . ஆனால் அது உண்மையில்லை என நினைக்கிறேன். சில கோணங்களில் பார்க்கும்போது நான் சிரிப்பது போன்று தெரிகிறது . அந்தக் காட்சி தவறாக நான் சிரிப்பது போல இருந்திருந்தால் நிச்சயம் அதற்கு பின்னணி குரல் கொடுத்து டப் செய்திருக்க மாட்டார்கள். எடிட்டிங்கில் அந்த சீன் இருந்தது’ என்று கூறியுள்ளார் .