உயிர் வாழ்வதற்கு தண்ணீர் எவ்வளவு அவசியமோ அவ்வளவு அவசியம் சின்னம்மாவின் தேவை என்று திவாகரன் கூறியுள்ளார்.
சொத்து குவிப்பு வழக்கில் சிறை வாசம் அனுபவித்து வந்த சசிகலாவின் தண்டனை காலம் முடிவடைந்து தற்போது கடந்த 27ஆம் தேதி விடுதலையானார். இதையடுத்து முன்னதாக ஏற்பட்ட கொரோனா காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் பூரண குணமடைந்து பெங்களூருவில் உள்ள பண்ணை வீட்டில் தங்கியிருந்தார். இதையடுத்து பெங்களூருவில் இருந்து புறப்பட்டு சென்னை வந்தடைந்தார். அவருக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அவருடைய வருகை திமுகவில் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறித்துசெய்தியாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இது குறித்து சசிகலாவின் சகோதரர் திவாகரன் கூறுகையில், “சசிகலாவின் தொண்டர்கள் அவருடைய வருகையால் உற்சாகத்தில் உள்ளனர். சசிகலாவால் மட்டும் தான் திமுகவை வீழ்த்த முடியும். மனிதர்கள் உயிர் வாழ்வதற்கு தண்ணீர் எவ்வளவு தேவையோ? அதே போலதான் சின்னம்மாவின் தேவையும். சசிகலா தேவையில்லை என்று யாராவது சொன்னால் நான் சாகும் வரை தண்ணீர் குடிக்க மாட்டேன் என்பது போல தான் பார்க்கவேண்டும்” என்று கூறியுள்ளார்.