விருதுநகர் சந்தைகளில் ரப்பர் அரிசி விற்பனை செய்யப்படுவதாக பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் வசிக்கும் பிச்சைமணி என்பவர் நகராட்சி சாலையில் தனியார் பார் நடத்தி வந்துள்ளார். இவர் தனது பாரில் பணிபுரியும் ஊழியர்களுக்கு அங்கேயே சமையல் சமைத்து உணவு வழங்குவது வழக்கம். இந்நிலையில் இவரிடம் உணவு சாப்பிட்ட ஊழியர்களுக்கு வயிற்றுப்போக்கு பிரச்சனை ஏற்பட்டுள்ளதால் அவர்களை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்துள்ளனர். ஆனால் அவர்களுக்கு வயிற்றுப் போக்கு ஏற்பட்டதற்கான காரணம் குறித்து யாருக்கும் விளங்கவில்லை. இந்நிலையில் அவர்கள் சாப்பிடுவதற்காக பயன்படுத்தப்படும் சமையல் அரிசியானது வேகுவதற்கு ஒன்றரை மணி நேரம் ஆவதாகவும், அதனை உருண்டையாக பிடித்து தரையில் வீசினால் அது உதிர்வதில்லை எனவும் பிச்சைமணியின் சமையலர் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து மக்கள் நீதி மன்ற மாவட்ட செயலாளர் காளிதாசனிடம் பிச்சைமணி இது குறித்து தெரிவித்துள்ளார். அதன்பின் அந்த அரிசியை ஆய்வு செய்து உண்மையை கண்டறிய வேண்டும் என மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிக்கு அவர் மனு ஒன்றை அனுப்பியுள்ளார். இதனை தொடர்ந்து விருதுநகர் சந்தையில் ரப்பர் அரிசியானது பயன்பாட்டில் உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்து, அதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் வலியுறுத்தியுள்ளார். இதுபற்றி உணவு பாதுகாப்பு அதிகாரி செல்வராஜன் கூறும்போது, தமிழகத்தில் பிளாஸ்டிக், ரப்பர் அரிசி பயன்பாட்டில் இல்லை எனவும், விருதுநகர் சந்தைகளில் இந்த வகை அரிசி உள்ளதா என ஆய்வு செய்து அதற்கான உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.