அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு பாடை கட்டி ஒப்பாரி வைத்து நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் சார்பில் மறியல் போராட்டம் 6-ஆவது நாளாக நடைபெற்று உள்ளது. இந்தப் போராட்டமானது மாவட்ட தலைவர் ராணி என்பவரின் தலைமையில் நடைபெற்றுள்ளது. இந்த போராட்டத்தில் அகவிலைப்படி, சரண்டர் போன்ற பறிக்கப்பட்ட உரிமைகளை திரும்ப வழங்க வேண்டும் எனவும், அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர்கள், ஊர்ப்புற நூலகங்கள், தொகுப்பூதியத்தில் பணிபுரியும் சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கப்பட வேண்டும் எனவும் கூறியுள்ளனர். இந்த போராட்டத்தில் முக்கியமாக புதிய பென்ஷன் திட்ட ரத்து செய்து பழைய பென்ஷன் திட்டத்தை மீண்டும் கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
அதோடு அரசு துறையில் உள்ள காலி பணியிடங்களை விரைவில் நிரப்ப வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது இந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அரசின் கவனத்தை ஈர்க்கும் பொருட்டு தராசுகளை கைகளில் ஏந்தியவாறும், கண்களில் கருப்பு துணி கட்டியும், அரசின் தாமதத்தால் அரசு ஊழியர்கள் இறந்து கொண்டிருப்பதாக பாடை கட்டி அதில் ஒருவரைப் படுக்க வைத்து ஒப்பாரி வைத்தும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் போலீசார் கலெக்டர் அலுவலகம் முன்பு மறியலில் ஈடுபட்டவர்களை மொத்தம் 93 பெண்கள் உட்பட 143 பேர் கைது செய்து குப்பாண்டம்பாளையம் பகுதியில் உள்ள திருமண மண்டபத்திற்கு அழைத்துச் சென்றுவிட்டனர்.