புத்துணர்வு முகாமில் கலந்து கொண்ட யானைகள் துதிக்கையால் கட்டி தழுவி தங்களது சந்தோசத்தை வெளிபடுத்தியுள்ளன.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில் பவானி ஆற்றுப் படுகையில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் கோவில் மற்றும் திருமடங்களை சேர்ந்த கோவில் யானைகளுக்கு புத்துணர்வு முகாமானது நடத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தொடர்ந்து 48 நாட்கள் நடைபெறும் இந்த முகாமை அமைச்சர்கள் எஸ்.பி வேலுமணி, சேவூர் ராமச்சந்திரன் மற்றும் திண்டுக்கல் சீனிவாசன் போன்றோர் கலந்து கொண்டு தொடங்கி வைத்துள்ளனர்.
இந்த முகாமிற்கு வந்த தமிழகத்தில் உள்ள கோவில்கள் மற்றும் மடங்களை சேர்ந்த 26 யானைகள் லாரியில் இருந்து இறங்கியதும் நீண்ட தூரப்பயணம் காரணமாக தண்ணீர் உள்ள குழாயை தேடி சென்று தாகத்தை தீர்த்து கொண்டுள்ளன. மேலும் ஒருசில கோவில் யானை துதிக்கையால் மண்ணை அள்ளி தன் உடல் முழுவதும் வீசி சந்தோஷத்தை வெளிப்படுத்தியுள்ளது. இதனையடுத்து வனபத்ரகாளியம்மன் கோவில் முன்பு சிறப்பு பூஜைகாக அழைத்துச் செல்லப்பட்ட இந்த யானைகள் துதிக்கையால் அம்மனை வழிபட்டுள்ளன.
இதனை தொடர்ந்து நீண்ட நாட்களுக்கு பிறகு இந்த யானைகள் சந்தித்துக்கொண்டதால் துதிக்கையால் கட்டித் தழுவி தங்களது அன்பை வெளிப்படுத்தியுள்ளன. இந்த முகாமில் பங்கேற்ற யானைகள் நடைபயிற்சிக்கு அழைத்துச் செல்லப்பட்டன. அதோடு ஷவரில் குளிக்க சென்ற யானைகள் தண்ணீரை பீச்சி அடித்து சந்தோசத்தை வெளிப்படுத்தியுள்ளன. மேலும் காட்டு யானைகளால் இந்த முகாமில் பங்கேற்கும் யானைகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படக்கூடாது என்பதற்காக முகாம் நடைபெறும் இடத்தை சுற்றி மூன்று அடுக்கு மின்வேலி பாதுகாப்பு ஏற்பாடானது சிறப்பாக செய்யப்பட்டுள்ளது.