3 வது திருமணம் செய்ததோடு மனைவியை மிரட்டிய குற்றத்திற்காக வங்கி ஊழியர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டத்திலுள்ள எடமலைபட்டி புதூர் பகுதியில் சித்ரா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த 2014 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் கல்லுக்குழி நாயக்கர் தெருவில் வசிக்கும் நாகராஜ் என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. அதன் பின் தஞ்சாவூரில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் நாகராஜ் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் தனது கணவர் நாகராஜுக்கு ஏற்கனவே 2 திருமணம் நடைபெற்றுள்ளது என்பது சித்ராவிற்கு தெரியவந்துள்ளது.
இதில் நாகராஜன் முதல் மனைவியின் பெயர் புவனேஸ்வரி என்பதும் கருத்து வேறுபாடு காரணமாக விவகாரத்து செய்துவிட்டு அதன் பின்னர் திலகவதி என்ற பெண்ணை 2வது திருமணம் செய்துள்ளார் என்பதும் சித்ராவிற்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து இரண்டாவது திருமணம் செய்து கொண்டதை ஏன் மறைத்தீர்கள் என்று நாகராஜனிடம் சண்டை போட்ட போது, கோபத்தில் நாகராஜ் சித்ராவை தகாத வார்த்தைகளால் திட்டியதோடு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். அதன் பின் திருச்சி கண்டோன்மென்ட் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இதுகுறித்து சித்ரா புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் 4 சட்டப்பிரிவுகளின் கீழ் நகராஜன் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்து விட்டனர்.