பாலியல் மற்றும் இனப்பெருக்க நல விழிப்புணர்வு தினம் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் 12ஆம் நாள் கடைபிடிக்கப்படுகிறது.
பாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதார விழிப்புணர்வு தினமானது ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் 12ஆம் நாள் கடைபிடிக்கப்பட்டு வருகின்றது. ஒரு சாதாரண மனிதனின் வாழ்வில் பால்வினை தொற்று நோய்கள் என்பது பொது சுகாதார பிரச்சனைகளில் ஒன்றாக இருக்கின்றது. எனவே இந்த நாளில் பால்வினை மற்றும் இனப்பெருக்க நலம் தொடர்பான அனைத்து ஆரோக்கியமான வாழ்க்கை முறைகளையும் பழக்கவழக்கங்களையும் பற்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். மேலும் பால்வினை சுகாதாரம் குறித்து ஒவ்வொருவரும் அறிந்து கொள்வது மிக அவசியமாகிறது. எனவே இந்த நாளில் பொதுமக்களுக்கு பால்வினை நோய்கள் குறித்தும், அதனை தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்தும், அன்றாட வாழ்வில் தனிநபர் மேற்கொள்ளவேண்டிய பாதுகாப்பு சுகாதார முறைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
இதற்காக தேசிய மக்கள்தொகை நிலைத்தன்மை நிதியம் ஒரு தொலைபேசி இணைப்பைத் தொடங்கி பாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதார பிரச்சினைகள் குறித்த கேள்விகளுக்கு உடனடியாக பதில் அளிக்கின்றனர். மேலும் குடும்ப கட்டுப்பாடு, இனப்பெருக்க சுகாதாரம், குழந்தைகள் நலம் போன்றவற்றை அறிவதற்கு 1800-11-6555 என்ற எண்ணை தொடர்பு கொண்டு பொது மக்கள் தங்களது சந்தேகங்களை தீர்த்துக் கொள்ளலாம். அதோடு காலை 9 மணியில் இருந்து இரவு 9 மணி வரை செயல்படும் இந்த தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு பால்வினை சுகாதாரம், கருத்தடை கர்ப்பம், பால்வினை நோய்கள், கருக்கலைப்பு, மலட்டுத்தன்மை போன்ற பிரச்சனைகள் குறித்த கேள்விகளுக்கு தீர்வினை உடனடியாக உயர் அதிகாரிகள் மற்றும் மருத்துவர்கள் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.