இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் நான் இதுவரையில் பார்த்ததிலேயே இது தான் வங்கதேசஅணி வெளிப்படுத்திய சிறப்பான ஆட்டம் என்று பாராட்டியுள்ளார்
உலக கோப்பை போட்டியில் நேற்று 40-வது லீக் ஆட்டத்தில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதியது. எட்ஜ்பாஸ்டான் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழந்து 314 ரன்கள் குவித்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக ஹிட் மேன் ரோஹித் சர்மா 104 ரன்களும், கேஎல் ராகுல் 77 ரன்களும், ரிஷப் பண்ட் 48 ரன்களும் எடுத்தனர். பின்னர் ஆடிய வங்கதேச அணி 48 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 286 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இதனால் இந்திய அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வென்று அரை இறுதிக்குள் நுழைந்தது.
இப்போட்டியில் பந்து வீச்சில் பலம் வாய்ந்த இந்திய அணி வங்கதேச அணியை 250 ரன்னுக்குள் கட்டுப்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வெற்றி பெற்று விடுவார்களோ என்ற அளவிற்கு வங்கதேச அணியினர் சிறப்பாக விளையாடி இலக்கை துரத்தினர். இருப்பினும் இறுதியில் இந்திய அணி விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றியுடன் முடித்து வைத்தனர்..
இந்த நிலையில், சிறப்பாக விளையாடிய வங்கதேச அணியை சச்சின் டெண்டுல்கர் பாராட்டியுள்ளார். இது குறித்து அவர் பேசுகையில், வங்கதேச அணி நடப்பு உலக கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடி வருகிறது. ஒரு போட்டி மட்டுமில்லாமல் தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.அவர்களுக்கு எனது பாராட்டுக்கள். நான் இதுவரை பார்த்ததிலேயே இது தான் வங்கதேச அணி வெளிப்படுத்திய சிறப்பான ஆட்டம்” என்று தெரிவித்தார்.
அதேபோல கேப்டன் கோலியும் போட்டி முடிந்த பின் பேசியபோது, வங்கதேச அணி சிறப்பாக விளையாடியதாக தெரிவித்தார். அவர்கள் கடைசி பந்து வரையில் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் விளையாடினார்கள் என்றும் தெரிவித்தார்.