தமிழகம் முழுவதிலும் பிப்ரவரி 14 ஆம் தேதி லாக்டவுன் போடும்படி இளைஞர்கள் கோரிக்கை வைத்ததை அடுத்து முதல்வர் உறுதி அளித்துள்ளார்.
தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்துக் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினர் கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து கொண்டிருந்த சசிகலா கடந்த ஜனவரி 27-ஆம் தேதி விடுதலையானார். அதன்பிறகு பிப்ரவரி 8-ஆம் தேதி தமிழகம் திரும்பினார். அவரின் வருகை அரசியலில் ஏதாவது மாற்றத்தை ஏற்படுத்தும் என அனைவரும் குழப்பத்தில் உள்ளனர்.
இந்நிலையில் முதல்வர் பழனிசாமி சட்டமன்ற தேர்தலுக்காக தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் தொடர்ந்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். அவர் பிரசாரத்தின்போது, இளைஞர்கள் சிலர் பிப்ரவரி 14 ஆம் தேதி லாக்டவுன் போடும்படி கோரிக்கை வைத்தனர். இதைக் கேட்டதும் குலுங்கி குலுங்கி சிரித்த முதல்வர் உங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படும் என புன்னகையுடன் கூறிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.