நீண்ட நேரமாக சாலையில் சுற்றித்திரிந்த ஒற்றை யானையால் வாகன ஓட்டிகள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.
ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலத்தில் இருந்து மைசூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் திம்பம் மலைப்பாதை அமைந்துள்ளது. இதன் அடிவாரத்தில் ஏராளமான யானைகள் வனப்பகுதியில் வாழ்ந்து வருகின்றன. இந்த வனப்பகுதியில் இருந்து மாலை நேரத்தில் ஒற்றை யானை வெளியே வந்து வழி தவறி கொண்டை ஊசி வளைவு சாலைக்கு வந்து விட்டது. இந்த யானை அப்படியே புற்களை தின்றுகொண்டே 3-வது கொண்டை ஊசி வளைவு வரை மேல்நோக்கி ஏறி சென்றுள்ளது. இதனால் அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்து வாகனங்களை இயக்காமல் அப்படியே நிறுத்தி விட்டனர்.
மேலும் அந்த யானை சாலை நடுவே அங்கும் இங்கும் சுற்றிக் கொண்டு இருந்ததால் அச்சமடைந்த வாகன ஓட்டிகள் அங்கிருந்து திரும்பி சென்று விட்டனர். அதன் பின் அந்த யானை அப்பகுதியில் இருந்த புதருக்குள் சென்றுவிட்டது. இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, முதுமலை மற்றும் கேரள வனப்பகுதியில் இருந்து சத்தியமங்கலம் புலிகள் காப்பகப் பகுதிக்குள் ஏராளமான யானைகள் இடம்பெயர்ந்து வந்து விட்டதால் யானைகள் அதிக அளவில் காணப்படுகிறது. எனவே வாகன ஓட்டிகள் மிகுந்த கவனத்தோடு பயணிக்க வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.