காதலர் தினம் நெருங்கும் நேரத்தில் இணையதளத்தில் வரும் லிங்கை கிளிக் செய்ய வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் பிப்ரவரி 14ஆம் தேதி காதலர் தினம் கொண்டாடப்படும். அன்றைய நாளில் ஒருவர் யார் மீது அதிகம் அன்பு வைத்துள்ளார்கள் அவர்களுக்கு பல்வேறு பரிசுப் பொருட்களை வாங்கிக்கொடுத்து அன்பை பகிர்ந்து கொள்வார்கள். அதுமட்டுமன்றி காதலர் தினத்தை முன்னிட்டு சில அதிரடி சலுகைகளும் ஆன்லைன் மூலமாக வழங்கப்படும். அதில் சில பொய்யான தகவல்களும் இருப்பதுண்டு. அதனால் மக்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும். அதன்படி காதலர் தினம் நெருங்கும் நேரத்தில் இணையதளங்களில் பிசிங் மோசடிகள் அதிகரித்துள்ளதாக செக் பாயிண்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதாவது மின்னஞ்சலில் சலுகைகளை அளித்து, அதில் ஒரு லிங்கை அழுத்த கேட்கும். அதனை கிளிக் செய்யும் பட்சத்தில் உங்களுடைய தனிப்பட்ட தகவல்கள் கேட்கப்படும். நீங்கள் தகவல்களை கொடுக்காவிட்டாலும், அந்த லின்கை கிளிக் செய்யும் போது உங்கள் தகவல்கள் திருடப்பட்டு வங்கி கணக்கில் இருந்து பணம் பறி போக வாய்ப்பு உள்ளதாக எச்சரித்துள்ளது. அதனால் பொதுமக்கள் அனைவரும் சற்று விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.