உலகத் தமிழர்களின் பிரதான உணவு என்றாலே அது இட்லிதான். 6 மாத குழந்தை முதல் 60 வயது முதியவர்கள் வரை மிக எளிதான செரிமானமாகக்கூடிய உணவு இது தான். மிருதுவான இட்லியோடு ஒரு சுவையான சாம்பார், பலவிதமான சட்னி வைத்து சாப்பிடுவது என்பது ஒரு தனி சுவை. இப்படி அந்த பஞ்சு போன்ற இட்லி வர என்ன செய்யவேண்டும் என்பது குறித்து பார்க்கலாம்.
பஞ்சு போல இட்லி இருப்பதற்கு இட்லிக்கு மாவு அரைக்கும்போது ஒரு தேக்கரண்டி ஜவ்வரிசி சேர்த்து அரைத்தால் இட்லி மிருதுவாக இருக்கும்.
நான்கு பங்கு இட்லி அரிசிக்கு ஒரு பங்கு உளுந்து, ஒரு தேக்கரண்டி வெந்தயம், ஒரு தேக்கரண்டி வெள்ளை அவல் சேர்த்து 5 மணி நேரம் ஊறவைத்து அரைத்தால் பஞ்சு போல இட்லி வரும்.
இட்டலி அவிக்க காட்டன் துணியை பயன்படுத்த வேண்டும். அந்த துணியை நன்றாக துவைத்து வெயிலில் காய வைக்கவேண்டும். அப்போது தான் இட்லி ஒட்டாமல் வரும்.
இட்லிக்கு மாவு ஊற்றும்போது இரண்டு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி கலக்கி விட்டு அரைத்தால் இட்லி ஒட்டாமல் அருமையாக வரும்.
வெந்தபிறகு இட்லியை எடுக்கும் போது சிறிது தண்ணீர் தெளித்து எடுத்தால் ஒட்டாமல் வரும்.
இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் இட்லி அவிக்கும் நேரம். 10 நிமிடத்திற்கு மேல் இட்லியை அவிக்க கூடாது.