11 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி பள்ளிக்கு செல்ல விருப்பமில்லாமல் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டத்திலுள்ள சேந்தமங்கலம் சாலையில் துரைராஜ் என்பவர் வசித்துவருகிறார். இவர் மாரியம்மன் கோவில் பகுதியில் உள்ள ஒரு கடையில் விற்பனையாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு காவியா என்ற மகள் இருக்கிறார். இவர் நாமக்கல் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த மாணவி கடந்த 8ஆம் தேதி முதல் பள்ளிக்கு சென்று வந்த நிலையில், திடீரென அந்தப் பள்ளிக்கு செல்ல தனக்கு விருப்பமில்லை எனவும், வேறு பள்ளியில் சேர்த்து விடுங்கள் எனவும் தனது பெற்றோரிடம் வலியுறுத்தியுள்ளார்.
இந்நிலையில் வெளியே சென்ற மாணவி வீட்டிற்கு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் காவியாவை அனைத்து இடங்களிலும் தேடிப் பார்த்தும், அவர் கிடைக்கவில்லை. அந்த சமயத்தில் காவியா நாமக்கல் ரயில் நிலையம் அருகே உள்ள விவசாய கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து அருகில் உள்ளவர்கள் அவரை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்து பார்த்த டாக்டர்கள் காவியா ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து துரைராஜ் அளித்த புகாரின் பேரில் நாமக்கல் போலீசார் வழக்குப் பதிந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் காவியாவிற்கு அந்த பள்ளிக்கு செல்ல விருப்பமில்லை தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.