பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுக்க முடியாது என்ற அச்சத்தில் கடிதம் எழுதிவிட்டு பள்ளி மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்தில் உள்ள காமராஜர் நகரில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரவீன் என்ற 16 வயது மகன் இருக்கின்றான். இவர் கொளத்தூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் கொரோனா ஊரடங்கு காலம் முடிவடைந்து பள்ளிகள் திறந்த பின்பு இரண்டு நாட்கள் மட்டுமே பள்ளிக்கு சென்ற பிரவீன், அதன்பிறகு வீட்டிலேயே இருந்துள்ளார். இதனால் அவரது பெற்றோர் ஏன் பள்ளிக்கு செல்லவில்லை என்று கேட்டதற்கு, அவர் வீட்டு பாடம் செய்ய வேண்டும் என தனது பெற்றோரிடம் கூறியுள்ளார்.
இந்நிலையில் மன உளைச்சலில் இருந்த பிரவீன் தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து வீட்டு வேலைக்கு சென்ற பிரவீனின் தாயார் வீட்டிற்கு திரும்பி வந்தபோது, தனது மகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். அதன்பின் அருகிலிருந்தவர்கள் அவரை உடனடியாக மீட்டு அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்து பார்த்த டாக்டர்கள் பிரவீன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிரவீன் உடலை கைப்பற்றி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்னவென்று தீவிர விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர். அப்போது பிரவீன் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு எழுதிய கடிதம் போலீசாரிடம் சிக்கி உள்ளது. அதில், பொது தேர்வுக்கு இன்னும் 3 மாதங்களே உள்ள நிலையில் ஆசிரியர்கள் தேர்வு எழுதுவதற்கு உதவுவார்கள் என்று நினைத்து, தான் பள்ளிக்கு சென்றதாகவும் ஆனால் ஆசிரியர்களோ ஊரடங்கு சமயத்தில் நன்றாக படித்து இருந்தால் மட்டுமே இப்போது படித்து பொதுத் தேர்வில் நல்ல மதிப்பெண் எடுக்க முடியும் என கூறியிருக்கின்றனர்.
மேலும் தான் நன்றாக படித்து அதிக மதிப்பெண்கள் எடுத்தால் மட்டுமே கல்லூரியில் சேர்ந்து பி.காம் படிக்க முடியும் என அதில் குறிப்பிட்டுள்ளார். எனவே தன்னால் பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுக்க இயலாது என்று எண்ணி மனம் உடைந்து தற்கொலை செய்துகொள்ளப் போவதாகக் கடிதம் எழுதி வைத்து பிரவீன் தற்கொலை செய்து கொண்டது போலீசாருக்கு தெரியவந்துள்ளது. இவ்வாறாக கொரோனா ஊரடங்கு பிறகு பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் தற்கொலை செய்வது அதிகரித்துள்ளது.