சவுதி அரேபியாவில் பெண்கள் வாகனம் ஓட்டக் கூடாது என்ற தடையை எதிர்த்து குரல் கொடுத்ததால் சிறையில் அடைக்கப்பட்ட பெண்மணி தற்போது விடுவிக்கப்பட்டுள்ளார்.
சவுதி அரேபியாவில் லூஜின் அல் ஹத்லால் என்ற பெண் வசித்து வருகிறார். அந்த நாட்டில் பெண்களுக்கு என பல்வேறு தடைகள் உள்ளன. அவைகள் பெண்கள் கார் ஓட்டுவதற்கு தடை, விளையாட்டுப் போட்டிகளையும், சினிமாவையும் நேரடியாக பார்ப்பதற்குத் தடை, முகம் தெரியாத அளவுக்கு ஆடைகளை அணிதல் போன்ற பல கட்டுப்பாடுகளை சவுதி அரேபியாவில் வாழும் பெண்கள் கடைபிடிக்கின்றனர். இந்நிலையில் லூஜின் சவுதி அரேபியாவில் பெண்கள் வாகனம் ஓட்டுவதற்கான தடையை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்ற எண்ணத்தில் பல்வேறு விழிப்புணர்வு முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். இதனால் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் லூஜின் கடந்த 2018ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டுள்ளார்.
அதன் பின் லூஜின் அடைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு மக்களும் தங்களது கருத்துக்களை கூறியுள்ளனர். இதனால் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருந்த லூஜின், தற்போது 1001 நாட்கள் சிறை தண்டனை அனுபவித்த பிறகு விடுதலை செய்யப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து சவுதி அரேபியா இளவரசரான முகமது பின் சல்மான் ஆட்சிக்கு வந்த பிறகு பல்வேறு சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இவர் கடந்த 2018ஆம் ஆண்டு பெண்கள் கார் ஓட்டுவதற்கும், ஓட்டுனர் உரிமம் பெற்றுக் கொள்வதற்கும், பெண்கள் திரையரங்குகளுக்கு சென்று திரைப்படங்களை பார்ப்பதற்கும் அனுமதி அளித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.