வேலைக்கு செல்லாமல் குடிக்க பணம் கேட்டு தொந்தரவு செய்ததால் தந்தை மகனை குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள திருத்தணி செட்டிகுளம் பகுதியில் பழனி என்பவர் வசித்து வருகிறார். இவர் திருத்தணி பகுதியில் உள்ள காமராஜர் மார்க்கெட்டில் காய்கறி வியாபாரம் செய்து வந்துள்ளார். இவரது முதல் மனைவியான செல்வி என்பவர் விவாகரத்து பெற்றுக்கொண்டு இவரை விட்டு பிரிந்து சென்றுள்ளார். இவருக்கு கீர்த்தனா, மோனிஷா என்ற 2 மகள்களும், கோகுல் என்ற மகனும் இருக்கின்றனர். மேலும் இரண்டாவது திருமணம் செய்து கொண்ட பழனிக்கு மற்றொரு மகனும் இருக்கிறார். இந்நிலையில் இவரது முதல் மனைவியின் மகனான கோகுல் பத்தாம் வகுப்பு வரை படித்து முடித்துவிட்டு எந்த வேலைக்கும் செல்லாமல் ஊர் சுற்றியதோடு மட்டுமில்லாமல், மதுவிற்கு அடிமையாகி அவர் தந்தையிடம் குடிப்பதற்கு பணம் கேட்டு அடிக்கடி தொந்தரவு செய்துள்ளார்.
இந்நிலையில் குடிபோதையில் கோகுல் மார்க்கெட் பகுதியில் வியாபாரம் செய்து கொண்டிருந்த தனது தந்தையிடம் சென்று குடிப்பதற்கு மேலும் பணம் கேட்டு தொந்தரவு செய்ததால் தந்தைக்கும் மகனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் கோபமடைந்த பழனி தனது மகனின் முகத்தில் ஓங்கி கல்லால் அடித்து தாக்கியுள்ளார். அதன்பின் வாழை இலை வெட்ட பயன்படுத்தும் கத்தியால் சரமாரியாக அவரை குத்தியுள்ளார். இதில் படுகாயமடைந்த கோகுல் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனையடுத்து திருத்தணி காவல் நிலையத்திற்கு நேரடியாக சென்று தனது மகனை கொலை செய்த விவரத்தை கூறி பழனி போலீசாரிடம் சரண் அடைந்து விட்டார். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.