சிங்கப்பூருக்கு சென்னையிலிருந்து கடத்த முயன்ற 25 லட்சம் மதிப்புள்ள செம்மரக்கட்டைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்து விட்டனர்.
சென்னை மாவட்டத்தில் உள்ள சுங்க இலாகா அதிகாரிகள் மீனம்பாக்கம் பன்னாட்டு முனையத்தில் இருந்து சிங்கப்பூருக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களை சோதனை செய்துள்ளனர். அப்போது இரண்டு பெட்டிகளில் சுத்தமான படுக்கை விரிப்புகளை சிங்கப்பூருக்கு ஏற்றுமதி செய்யப்படுவதாக அதில் எழுதப்பட்டிருந்தது. மேலும் அந்தப் பெட்டிகள் அதிக எடையுடன் இருந்ததால் சந்தேகமடைந்த சுங்க இலாகா அதிகாரிகள் அந்த பார்சல் பெட்டிகளை பிரித்து ஆய்வு செய்துள்ளனர். அப்போது செம்மரக்கட்டைகளை பெட்சீட்டுக்குள் மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்த அதிகாரிகள் உடனடியாக இதுகுறித்து வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனையடுத்து வனத்துறை அதிகாரிகள் அங்கு வந்து அதனை சோதனை செய்தபோது, அவை செம்மரக்கட்டைகள் தான் என்பது உறுதியாகி விட்டது. இந்த செம்மரக்கட்டைகளில் மருத்துவ குணங்கள் அதிக அளவில் இருப்பதால் இதனை ஏற்றுமதி செய்ய அரசு தடை விதித்துள்ளது. இந்நிலையில் சிங்கப்பூருக்கு சென்னையில் இருந்து கடத்தி செல்வதற்கு முயன்ற 25 லட்ச ரூபாய் மதிப்புள்ள 497 கிலோ எடை கொண்ட செம்மர கட்டைகளை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் இந்த செம்மரக் கட்டைகளைக் ஏற்றுமதி செய்த நிறுவன ஊழியரை சுங்க அதிகாரிகள் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.