சென்னையில் பாஜக உறுப்பினர்கள் ஒட்டிய போஸ்டரில் நடிகர் ரஜினியின் புகைப்படம் இடம்பெற்றிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்துக் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது.
இதற்கு மத்தியில் கட்சி தொடங்குவதாக அறிவித்திருந்த ரஜினி தனது உடல் நலக்குறைவு காரணமாக, அரசியலுக்கு வரப்போவதில்லை என்ற அறிவிப்பை வெளியிட்டார். அதனால் அவரது ரசிகர்கள் அனைவரும் வருத்தத்தில் உள்ளனர். அதுமட்டுமன்றி சட்டமன்றத் தேர்தலில் யாருக்கு ஆதரவு அளிக்கப் போவதில்லை என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் சென்னையில் கராத்தே தியாகராஜன் பாஜகவில் இணைவதை விளம்பரப்படுத்தி, அக்கட்சி உறுப்பினர்கள் ஒட்டிய போஸ்டரில் நடிகர் ரஜினியின் புகைப்படம் இடம்பெற்றிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ரஜினி அரசியலுக்கு வரவில்லை என்றும்,பிற கட்சிகளுக்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என்றும் அறிக்கை வெளியிட்ட பின்னரும் ரஜினியின் புகைப்படத்தை பயன்படுத்தி இருப்பதை அவரது ரசிகர்கள் கண்டித்துள்ளனர்.